கணினியியல் தொடர்பில் மையச் செயற்பகுதி (central
processing unit) என்பது கணினி நிரல்களைச் செயற்படுத்தும் ஒரு பொறி ஆகும்.
மையச் செயற்பகுதி என்பது, அதன் விரிந்த பொருளில், இச் சொல் புழக்கத்துக்கு
வருவதற்கு முன்னர் இருந்த தொடக்ககாலக் கணினிகளுக்கும் பொருந்தக்
கூடியவையே. மையச் செயற்பகுதிகளின் வடிவம், வடிவமைப்பு, செயலாக்கம் என்பன
அவற்றின் தொடக்ககால முன்வடிவுகளிலிருந்து பெருமளவுக்கும் மாற்றம்
பெற்றுள்ளன எனினும் அவற்றின் அடிப்படை இயக்கம் கருத்தளவில் பெருமளவுக்கு
மாற்றம் அடையவில்லை.
தொடக்ககால
மையச் செயற்பகுதிகள், மிகப் பெரிய கணினிகளின் பகுதிகளாக அவற்றுக்கெனவே
வடிவமைப்புச் செய்யப்பட்டவையாக இருந்தன. இவ்வாறு குறிப்பிட்ட
கணினிகளுக்காகவே சிறப்பாக வடிவமைக்கும் செலவு கூடிய முறை காலப்போக்கில்
கைவிடப்பட்டுப் பரும்படியாகத் தயாரிக்கக் கூடியவையும், பல்வேறு
தேவைகளுக்கும் பயன்படக்கூடியனவுமான மையச் செயற்பகுதிகள் உருவாக்கப்பட்டன.
இவ்வாறு தரப்படுத்தும் (standardization) போக்கு திரிதடையத் தலைமைக்
கணிப்பொறிகள் (mainframes), சிறு கணிப்பொறிகள் (minicomputers)
போன்றவற்றின் அறிமுகத்துடன் உருவாகி, ஒருங்கிணை சுற்றமைப்பின் பரவலான
புழக்கத்துடன் மிக வேகமாக வளர்ச்சியடைந்தது. ஒருங்கிணை சுற்றமைப்புக்கள்,
சிக்கலான மையச் செயற்பகுதிகளைத் துல்லியமாக உருவாக்க வழி கோலின.
தரப்படுத்தலும், சிற்றளவாக்கமும் (miniaturization) மையச் செயற்பகுதிகளை
எதிர் பார்த்திராத அளவு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளன.
0 comments:
Post a Comment